01 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
02 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:
03 இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடாரவாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,
04 பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான்.
05 ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதான பலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.
06 அங்கே ஆசாரியன் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.
07 தாங்கள் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக் கடவது.
08 மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்க தகனபலி முதலானவைகளையிட்டு,
09 அதை ஆசரிப்புக் கூடார வாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல்.
10 இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.
11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
12 அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
13 இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன்.
14 சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
15 தானாய் இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது, புசித்தவன் எவனும், அவன் சுதேசியானாலும் பரதேசியானாலும், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாயிருப்பான்.
16 அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும், ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.
இந்த வலைப்பக்கத்தை இதிலிருந்து அணுகலாம்
https://www.bibletamil.in/லேவியராகமம்-17
https://www.bibletamil.in/leviticus-17