01 நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.
02 அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச்சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.
03 ராஜா அவர்களை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அந்தச் சொப்பனத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான்.
04 அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரியபாஷையிலே சொன்னார்கள்.
05 ராஜா கல்தேயருக்குப் பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்.
06 சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் தெரிவித்தீர்களேயாகில், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள் என்றான்.
07 அவர்கள் மறுபடியும் பிரதியுத்தரமாக: ராஜா அடியாருக்குச் சொப்பனத்தைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்றார்கள்.
08 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமதம்பண்ணப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது.
09 காலம் மாறுமென்று நீங்கள் எனக்குமுன்பாக பொய்யும் புரட்டுமான விசேஷத்தைச் சொல்லும்படி எத்தனம்பண்ணி இருக்கிறீர்கள்; நீங்கள் சொப்பனத்தை எனக்குத் தெரிவிக்காமற்போனால், உங்கள் எல்லாருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந்திருக்கிறது; ஆகையால் சொப்பனத்தை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் காண்பிக்கக்கூடுமென்று அறிந்துகொள்ளுவேன் என்றான்.
10 கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக; ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.
11 ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.
12 இதினிமித்தம் ராஜா மகா கோபமும் உக்கிரமுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான்.
13 ஞானிகளை கொலைசெய்யவேண்டுமென்ற கட்டளை வெளிப்பட்டபோது தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள்.
14 பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசி:
15 இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.
16 தானியேல் ராஜாவினிடத்தில்போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணை கொடுக்க விண்ணப்பம் பண்ணினான்.
17 பின்பு தானியேல் தன் வீட்டுக்குப்போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி, இரக்கம் கேட்கிறதற்காக,
18 அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்.
19 பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்.
20 பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.
21 அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.
22 அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.
23 என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால் உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான்.
24 பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்; பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும் என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்.
25 அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்.
26 ராஜா பெல்தெஷாத்சாரென்னும் நாமமுள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா என்று கேட்டான்.
27 தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும் ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது.
28 மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்:
29 ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார்.
30 உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.
31 ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக்கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.
32 அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும்,
33 அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.
34 நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி அவைகளை நொறுக்கிப்போட்டது.
35 அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
36 சொப்பனம் இதுதான்; அதின் அர்த்தத்தையும் ராஜசமுகத்தில் தெரிவிப்போம்.
37 ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார்.
38 சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.
39 உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யமொன்று எழும்பும்.
40 நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைபோல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.
41 பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.
42 கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால் அந்த ராஜ்யம் ஒருபங்கு உயரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.
43 நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.
44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
45 இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.
46 அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.
47 ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால் மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.
48 பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனை பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.
49 தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மகாநகரத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்
இந்த வலைப்பக்கத்தை இதிலிருந்து அணுகலாம்
https://www.bibletamil.in/தானியேல்-2
https://www.bibletamil.in/daniel-2