சங்கீதம் 79

01 தேவனே, புறஜாதியார் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.

02 உமது ஊழியக்காரரின் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும் உமது பரிசுத்தவான்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.

03 எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை.

04 எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம்.

05 எதுவரைக்கும் கர்த்தாவே! நீரென்றக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ?

06 உம்மை அறியாத ஜாதிகள் உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத ராஜ்யங்கள்மேலும் உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்.

07 அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.

08 பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.

09 எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்.

10 அவர்களுடைய தேவன் எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்? உமது ஊழியக்காரருடைய சிந்துண்ட இரத்தத்தின் பழிவாங்குதல் ஜாதிகளுக்குள்ளே எங்கள் கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும்.

11 கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது புயபலத்தினால் உயிரோடே காத்தருளும்.

12 ஆண்டவரே எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.

13 அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.


இந்த வலைப்பக்கத்தை இதிலிருந்து அணுகலாம்
https://www.bibletamil.in/சங்கீதம்-79
https://www.bibletamil.in/psalms-79