01 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
02 ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம்போலிருக்கிற ஒரு தடிப்பாவது அசறாவது வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியராகிய அவன் குமாரரில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன்.
03 அப்பொழுது ஆசாரியன் அவன் சரீரத்தின்மேல் இருக்கிற ரோகத்தைப் பார்க்கவேண்டும்; ரோகம் இருக்கும் இடத்தில் மயிர் வெளுத்தும், ரோகமுள்ள இடம் அவனுடைய மற்றச் சரீரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்க் குழிந்தும் இருந்தால் அது குஷ்டரோகம்; ஆசாரியன் அவனைப் பார்த்தபின்பு, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
04 அவன் சரீரத்தின்மேல் வெள்ளைப் படர்ந்திருந்தாலும், அவ்விடம் அவனுடைய மற்றத் தோலைப்பார்க்கிலும் அதிக பள்ளமாயிராமலும், அதின் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
05 ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல், அவன் பார்வைக்கு ரோகம் நின்றிருந்தால், ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
06 இரண்டாந்தரம் அவனை ஏழாம்நாளில் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது அசறு; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சுத்தமாயிருப்பானாக.
07 தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்தபின்பு, அசறு தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன்.
08 அப்பொழுது அசறு தோலிலே படர்ந்தது என்று ஆசாரியன் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம்.
09 குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்.
10 அப்பொழுது ஆசாரியன் அவனைப் பார்த்து, தோலிலே வெள்ளையான தடிப்பிருந்து, அது மயிரை வெண்மையாக மாறப்பண்ணிற்றென்றும், அந்தத் தடிப்புள்ள இடத்திலே இரணமாம்சம் உண்டென்றும் கண்டால்,
11 அது அவன் சரீரத்திலுள்ள நாள்பட்ட குஷ்டம்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்து வைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
12 ஆசாரியன் பார்க்கிற இடங்களெங்கும் தோலிலே குஷ்டம் தோன்றி, அந்த ரோகமுள்ளவனுடைய தலை தொடங்கி அவன் கால்மட்டும் அது தேகமுழுவதையும் மூடியிருக்கக்கண்டால்,
13 அப்பொழுது ஆசாரியன் பார்த்து, குஷ்டம் அவன் சரீரம் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் உடம்பெல்லாம் வெண்மையாய்ப்போனபடியால், அவன் சுத்தமுள்ளவன்.
14 ஆனாலும் இரணமாம்சம் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன்.
15 ஆகையால், இரணமாம்சத்தை ஆசாரியன் காணும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; இரணமாம்சம் தீட்டுள்ளது; அது குஷ்டம்.
16 அல்லது, இரணமாம்சம் மாறி வெண்மையானால், அவன் ஆசாரியனிடத்துக்கு வரவேண்டும்.
17 ஆசாரியன் அவனைப் பார்த்து, ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
18 சரீரத்தின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,
19 அவ்விடத்திலே ஒரு வெள்ளைத்தடிப்பாவது சிவப்பு கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால், அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
20 ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திருக்கவும், அதின் மயிர் வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கவேண்டும்; அது புண்ணில் எழும்பின குஷ்டம்.
21 ஆசாரியன் அதைப் பார்த்து, அதில் வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல் சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
22 அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருக்கக் கண்டால், அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டந்தான்.
23 அந்த வெள்ளைப்படர் அதிகப்படாமல், அவ்வளவில் நின்றிருக்குமாகில், அது புண்ணின் தழும்பாயிருக்கும்; ஆகையால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
24 ஒருவனுடைய சரீரத்தின்மேல் நெருப்புப்பட்டதினாலே வெந்து, அந்த வேக்காடு ஆறிப்போன இடத்திலே சிவப்பான படராவது வெண்மையான படராவது உண்டானால்,
25 ஆசாரியன் அதைப்பார்க்கக்கடவன்; அந்தப் படரிலே மயிர் வெண்மையாக மாறி, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிருந்தால், அது வேக்காட்டினால் எழும்பின குஷ்டம்; ஆகையால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகந்தான்.
26 ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது, படரிலே வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல், சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,
27 ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம்.
28 படரானது தோலில் பெருகாமல், அவ்வளவில் நின்று சுருங்கியிருந்ததாகில், அது சூட்டினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவனென்று தீர்க்கக்கடவன்; அது சூட்டினால் வந்த வேக்காடு.
29 புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்,
30 ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத்தோலைப்பார்க்கிலும் பள்ளமும் அதிலே மயிர் பொன் நிறமும் மிருதுவுமாயிருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவனென்று தீர்க்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிகுஷ்டம்.
31 ஆசாரியன் அந்தச் சொறிகுஷ்டத்தைப் பார்க்கும்போது, அவ்விடம் மற்றத்தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும் அதிலே கறுத்தமயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,
32 ஏழாம்நாளில் ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தச் சொறி இடங்கொள்ளாமலும் அதிலே பொன்நிறமயிர் இல்லாமலும், அவ்விடம் மற்றத்தோலைப் பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால்,
33 அந்தச் சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,
34 ஏழாம் நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொள்ளாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்தபின் சுத்தமாயிருப்பான்.
35 அவன் சுத்தமுள்ளவனென்று தீர்க்கப்பட்டபின், அந்தச் சொறி தோலில் இடங்கொண்டதானால்,
36 ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொண்டிருந்தால், அப்பொழுது மயிர் பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்கவேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.
37 அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமயிர் முளைத்ததேயாகில், சொறி சொஸ்தமாயிற்று; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
38 ஒரு புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் அவர்கள் சரீரத்தின்மேல் வெள்ளைப் புள்ளிகள் உண்டாயிருந்தால்,
39 ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்கள் சரீரத்திலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத் தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.
40 ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும் அவன் சுத்தமாயிருக்கிறான்.
41 அவனுடைய முன்னந்தலை மயிர் உதிர்ந்தால், அவன் அரை மொட்டையன்; அவனும் சுத்தமாயிருக்கிறான்.
42 மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது சிவப்புக்கலந்த வெண்மையான படர் உண்டானால், அது அதில் எழும்புகிற குஷ்டம்.
43 ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; அவனுடைய மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாக்கும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக் கண்டால்,
44 அவன் குஷ்டரோகி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.
45 அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, "தீட்டு, தீட்டு" என்று சத்தமிடவேண்டும்.
46 அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது.
47 ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,
48 பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரான பாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் தோன்றி,
49 வஸ்திரத்திலாவது, தோலிலாவது பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
50 ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து,
51 ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.
52 அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டு மயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற குஷ்டம்; ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.
53 வஸ்திரத்தின் பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது, அந்தத் தோஷம் அதிகப்படவில்லை என்று ஆசாரியன் கண்டால்,
54 அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாந்தரம் ஏழு நாள் அடைத்துவைத்து,
55 அது கழுவப்பட்டபின்பு அதைப் பார்க்கக்கடவன்; அந்தத் தோஷம் அதிகப்படாதிருந்தாலும் அது நிறம் மாறாததாயிருந்தால் தீட்டாயிருக்கும்; அக்கினியில் அதைச் சுட்டெரிக்கவேண்டும்; அது அவ்வஸ்திரத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உருவ அரிக்கும்.
56 கழுவப்பட்டபின்பு அது குறுகிறதென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது இராதபடிக்கு எடுத்துப்போடவேண்டும்.
57 அது இன்னும் வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது காணப்பட்டால், அது படருகிற தோஷம்; ஆகையினால் அது உள்ளதை அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.
58 வஸ்திரத்தின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவாவது கழுவப்பட்டபின்பு, அந்தத் தோஷம் அதைவிட்டுப் போயிற்றேயானால், இரண்டாந்தரம் கழுவப்படவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருக்கும்.
59 ஆட்டுமயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.
இந்த வலைப்பக்கத்தை இதிலிருந்து அணுகலாம்
https://www.bibletamil.in/லேவியராகமம்-13
https://www.bibletamil.in/leviticus-13