சங்கீதம் 77

01 நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

02 என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.

03 நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவிதொய்ந்துபோயிற்று. (சேலா.)

04 நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்.

05 பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.

06 இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.

07 ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?

08 அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ?

09 தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா.)

10 அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.

11 கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;

12 உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.

13 தேவனே, உமது வழி பரிசுத்தஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?

14 அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே, ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்.

15 யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை, உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா.)

16 ஜலங்கள் உம்மைக் கண்டது, தேவனே ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது.

17 மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.

18 உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.

19 உமது வழி கடலிலும், உமதுபாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று.

20 மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர்.


இந்த வலைப்பக்கத்தை இதிலிருந்து அணுகலாம்
https://www.bibletamil.in/சங்கீதம்-77
https://www.bibletamil.in/psalms-77