01 நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.
02 உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும் உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து அவனைப் பெருகப்பண்ணினேன்.
03 கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல்செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.
04 என் ஜனங்களே எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன்.
05 என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்.
06 உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம், அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.
07 நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
08 பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.
09 எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?
10 மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப்பண்ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?
11 அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன்பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
12 நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?
13 இடுக்கண்செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய உக்கிரத்துக்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? இடுக்கண்செய்கிறவனுடைய உக்கிரம் எங்கே?
14 சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான்; அவன் கிடங்கிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை.
15 உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.
16 நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.
17 எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.
18 அவள் பெற்ற புத்திரரெல்லாரிலும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை; அவள் வளர்த்த குமாரரெல்லாரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை.
19 இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உனக்குப் பரிதபிக்கிறவன் யார்? பாழ்க்கடிப்பும், சங்காரமும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உனக்கு ஆறுதல்செய்வேன்?
20 உன் குமாரர் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்குண்ட கலைமானைப்போல, எல்லா வீதிகளின் முனையிலும், கர்த்தருடைய உக்கிரத்தினாலும், உன்தேவனுடைய கண்டிதத்தினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.
21 ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடியாமல் வெறிகொண்டவளே, நீ கேள்.
22 கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை.
23 உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்.
இந்த வலைப்பக்கத்தை இதிலிருந்து அணுகலாம்
https://www.bibletamil.in/ஏசாயா-51
https://www.bibletamil.in/isaiah-51