01 அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
02 அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.
03 நாலாம் மாதம் ஒன்பதாந்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்திற்கு ஆகாரம் இல்லாமற்போயிற்று; நகரத்தின் மதிலில் திறப்பு கண்டது.
04 அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவுமாய் சமனான பூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.
05 கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.
06 அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,
07 சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
08 ஐந்தாம் மாதம் ஏழாந்தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருஷத்திலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் காவல் சேனாபதி எருசலேமுக்கு வந்து,
09 கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்து விட்டான்.
10 காவல் சேனாபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.
11 நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடி வந்துவிட்டவர்களையும், மற்ற ஜனக்கூட்டத்தையும், காவல் சேனாபதியாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டு போனான்.
12 தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டிருந்தான்.
13 கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப் போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.
14 செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்கடுத்த சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.
15 சுத்தப் பொன்னும் சுத்த வெள்ளியுமான தூபகலசங்களையும் கலங்களையும் காவல் சேனாபதி எடுத்துக்கொண்டான்.
16 சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகப் பண்ணுவித்த இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்திற்கும் நிறையில்லை.
17 ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போல் இருந்தது.
18 காவல் சேனாபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரரையும் பிடித்தான்.
19 நகரத்திலே அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்துபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைவனான இராணுவச்சம்பிரதியையும், தேசஜனத்திலே நகரத்தில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்தான்.
20 அவர்களைக் காவல் சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனான்.
21 அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோட்டான்; இப்படியே யூதா ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
22 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.
23 பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.
24 அப்பொழுது கெதலியா அவர்களுக்கும்; அவர்கள் மனுஷருக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்.
25 ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.
26 அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய ஜனங்கள் யாவரும் சேனாபதிகளும் கல்தேருக்குப் பயந்ததினாலே எழுந்து; புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.
27 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில்மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,
28 அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,
29 அவனுடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் நித்தம் தனக்கு முன்பாகப் போஜனம்பண்ணும்படி செய்தான்.
30 அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் கொடுக்கப்பட்டுவந்தது.
இந்த வலைப்பக்கத்தை இதிலிருந்து அணுகலாம்
https://www.bibletamil.in/2.இராஜாக்கள்-25
https://www.bibletamil.in/2.kings-25