01 தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்; கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.
02 அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; கிபியோனியரோ, இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும் யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்.
03 ஆகையால் தாவீது கிபியோனியரைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்யவேண்டியது என்ன? நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்ன என்று கேட்டான்.
04 அப்பொழுது கிபியோனியர் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்கள் விருப்பம் அல்ல என்றார்கள். அப்பொழுது அவன் அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
05 அவர்கள் ராஜாவை நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் எல்லையிலெங்கும் நிலைக்காதபடிக்கு, அழிந்துபோக எவன் எங்களை நிர்மூலமாக்கி எங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தானோ,
06 அவன் குமாரரில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊராகிய கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கிப்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான்.
07 ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக்கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,
08 ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவளுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப்பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து,
09 அவர்களைக் கிபியோனியர் கையில் ஒப்புக்கொடுத்தான்; அவர்களைக் கர்த்தருடைய சமுகத்தில் மலையின்மேல் தூக்கிப்போட்டார்கள்; அப்படியே அவர்கள் ஏழுபேரும் ஒருமிக்க விழுந்தார்கள்; வாற்கோதுமை அறுப்பு துவக்குகிற அறுப்புக்காலத்தின் முந்தினநாட்களிலே அவர்கள் கொன்றுபோடப்பட்டார்கள்.
10 அப்பொழுது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுப்புடவையை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து அவர்கள்மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டுமிருகங்களாகிலும் அவர்கள்மேல் விழவொட்டாதிருந்தாள்.
11 ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்னும் சவுலின் மறுமனையாட்டி செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது,
12 தாவீது போய், பெலிஸ்தர் கில்போவாவிலே சவுலை வெட்டினபோது, பெத்சானின் வீதியிலே தூக்கிப்போடப்பட்டதும், கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டணத்தார் அங்கே போய்த் திருட்டளவாய்க் கொண்டுவந்ததுமான சவுலின் எலும்புகளையும், அவன் குமாரனான யோனத்தானின் எலும்புகளையும், அவர்களிடத்திலிருந்து எடுத்து,
13 அங்கே இருந்து அவர்களைக்கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடே சேர்த்து,
14 சவுலின் எலும்புகளையும் அவன் குமாரனாகிய யோனத்தானின் எலும்புகளையும், பென்யமீன் தேசத்துச் சேலா ஊரிலிருக்கிற அவன் தகப்பனாகிய கீசின் கல்லறையில் அடக்கம்பண்ணுவித்தான்; ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்.
15 பின்பு பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது தாவீதும் அவனோடேகூட அவன் சேவகரும்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணினார்கள், தாவீது விடாய்த்துப்போனான்.
16 அப்பொழுது முந்நூறு சேக்கல்நிறை வெண்கலமான ஈட்டியைப் பிடிக்கிறவனும், புதுப்பட்டயத்தை அரையிலே கட்டிக்கொண்டவனுமான இஸ்பிபெனோப் என்னும் இராட்சத புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்டவேண்டுமென்று இருந்தான்.
17 செருயாவின் குமாரனாகிய அபிசாய் ராஜாவுக்கு உதவியாக வந்து, பெலிஸ்தனை வெட்டிக் கொன்றுபோட்டான். அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்.
18 அதற்குப் பின்பு பெலிஸ்தரோடே திரும்பவும் கோபிலே யுத்தம் நடந்தது; ஊசாத்தியனாகிய சீபேக்காய் இராட்சத சந்ததியான சாப்பை வெட்டிப்போட்டான்.
19 பெலிஸ்தரோடு இன்னும் வேறொருயுத்தம் கோபிலே உண்டானபோது, யாரெயொர்கிமின் குமாரனாகிய எல்க்கானான் என்னும் பெத்லகேமியன் காத் ஊரானாகிய கோலியாத்தின் சகோதரனை வெட்டினான்; அவன் ஈட்டித் தாங்கானது நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.
20 இன்னும் ஒரு யுத்தம் காத் ஊரிலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் கைகளில் அவ்வாறு விரல்களும் அவன் கால்களில் அவ்வாறு விரல்களும், ஆக இருபத்து நான்கு விரல்களுள்ளவன்; இவனும் இராட்சத பிறவியாயிருந்து,
21 இஸ்ரவேலை நிந்தித்தான்; தாவீதின் சகோதரனான சீமேயாவின் குமாரனாகிய யோனத்தான் அவனை வெட்டினான்.
22 இந்த நாலுபேரும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.
இந்த வலைப்பக்கத்தை இதிலிருந்து அணுகலாம்
https://www.bibletamil.in/2.சாமுவேல்-21
https://www.bibletamil.in/2.samuel-21