யோபு 14

01 ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.

02 அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.

03 ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ?

04 அசுத்தமானதிலிருத்து சுத்தமானதை பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.

05 அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக் கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.

06 அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.

07 ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;

08 அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,

09 தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும்.

10 மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?

11 தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறதுபோல,

12 மனுஷன் படுத்துக்கிடக்கிறான் ; வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை.

13 நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.

14 மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.

15 என்னைக் கூப்பிடும், அப்பொது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.

16 இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர், என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.

17 என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்.

18 மலை முதலாய் விழுந்து கரைந்துபோம், கன்மலை தன் இடத்தை விட்டுப்பேர்ந்துபோம்.

19 தண்ணீர் கற்களைக் குடையும்; ஜலப்பிரவாகம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; அப்படியே மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர்.

20 நீர் என்றைக்கும் அவனைப் பெலனாய் நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; அவன் முகரூபத்தை மாறப்பண்ணி அவனை அனுப்பிவிடுகிறீர்.

21 அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.

22 அவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும்; அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான்.


இந்த வலைப்பக்கத்தை இதிலிருந்து அணுகலாம்
https://www.bibletamil.in/யோபு-14
https://www.bibletamil.in/job-14