01 அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள்.
02 மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது; அதிலே எழுதியிருந்த விபரமாவது:
03 ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக்குறித்துப் பிறப்பித்த உத்தரவு என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக; அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாயிருக்கவேண்டும்.
04 அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சு வரிசை புது உத்திரங்களாலும் கட்டப்படக்கடவது; அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக.
05 அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்துக்கடுத்தபொன் வெள்ளிப் பணிமுட்டுகள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்கள் ஸ்தானத்திற்குப் போய்ச் சேரும்படிக்குத் திரும்பக் கொடுக்கப்படக்கடவது; அவைகளை தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகக்கடவர்கள் என்று எழுதியிருந்தது.
06 அப்பொழுது தரியுராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள்.
07 தேவனுடைய ஆலயத்தின்வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.
08 தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.
09 பரலோகத்தின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளையிடத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலானவை தினந்தினம் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது.
10 எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக.
11 பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளையென்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் நீங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினிமித்தாக அவனுடைய வீடு குப்பைமேடாக்கப்படவுங்கடவது.
12 ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர்; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான்.
13 அப்பொழுது நதிக்கு இப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் வகையராவும், தரியுராஜா கட்டளையிட்டபிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள்.
14 அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக்கட்டி முடித்தார்கள்.
15 ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது.
16 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள்.
17 தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு,
18 மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள்முறை வரிசைகளின்படியும் நிறுத்தினார்கள்.
19 சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள்.
20 ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும் தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்.
21 அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து,
22 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.
இந்த வலைப்பக்கத்தை இதிலிருந்து அணுகலாம்
https://www.bibletamil.in/எஸ்றா-6
https://www.bibletamil.in/ezra-6