01 அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.
02 அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.
03 அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர் அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.
04 ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.
05 ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.
06 ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன்மனதிலே நினைத்து,
07 ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,
08 ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.
09 அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.
10 அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.
11 அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும் படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.
12 பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பிவந்தான்; ஆமானோவென்றால் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப் போனான்.
13 ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷுக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷும் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; அவன் யூதகுலமானால் நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.
14 அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்குவர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.
இந்த வலைப்பக்கத்தை இதிலிருந்து அணுகலாம்
https://www.bibletamil.in/எஸ்தர்-6
https://www.bibletamil.in/esther-6